தர்மத்தின் முக்கியத்துவம் பற்றி, நாயகம் கூறியுள்ள கருத்துக்கள் நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளன. தனது வாழ்நாளெல்லாம் ஒருவன் தர்மம் செய்யாமல் இருந்து விட்டு, மரண வேளையில் கொடைவள்ளலாக மாறுவதால் என்ன பயன் விளைந்துவிடும்? மாறாக, இவர்களைப் பார்த்து இறைவன் கோபம் அடைகின்றான். ஒருவன் பாவியாகவே இருந்தாலும், தர்மம் செய்கின்ற கொடையாளியாக இருந்தால், அவன் அல்லாஹ்வின் தோழனாவான். கடவுளை வணங்குபவனாக இருந்து கொண்டு தர்மம் செய்யாமல் இருந்தால், அவன் அல்லாஹ்வின் பாவியாவான். மனித உடலில் 360 எலும்புகளை ஏன் இறைவன் இணைய வைத்தான் தெரியுமா? ஒவ்வொரு இணைப்புக்கும் தினமும் தர்மம் செய்வது மனிதனுக்கு அவசியமான செயலாகும் என்பதற்காக.கஞ்சத்தனம் ஷைத்தானின் குணமாகும். கருணை உள்ளவன் தங்கும் இடம் சொர்க்கமாகும். கஞ்சத்தனம் கொண்டவன் தங்குமிடம் நரகமாகும். கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் நம்மை நாசப்படுத்தி விடும். செல்வந்தனிடத்தில்கஞ்சத்தனம் இருப்பதை அல்லாஹ் வெறுக்கின்றான். கஞ்சன் அல்லாஹ்வை விட்டும் தூரமாகி விடுகிறான். தர்மம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்வை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.