எவ்வளவோ வேகமாகச் சென்றபோதும் நான் மீனாட்சி சன்னதிக்குள் நுழைகின்ற போது திரையிட்டு விட்டார்கள். திரையை விலக்க அரைமணி நேரம் ஆகும். தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டு இருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சிறப்புத் தரிசன வரிசையில் இருந்த ஒரு நடுத்தரவயதுப் பெண் கண்ணீர் மல்கக் கைகளைக் கூப்பி அம்பிகையிடம் வேண்டிக் கொண்டிருந்தார். எதிரே தர்ம தரிசன வரிசையில் இருந்த ஒரு இளைஞன் கண்களை மூடியபடி முணுமுணுத்துக் கொண்டிருந்தான். நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த நாற்பது வயது நபர் ஒருவர், தீவிரமாகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். ஐயோ பாவம்! இவர்களுக்கெல்லாம் என்ன கஷ்டமோ! பச்சைப்புடவைக்காரி ஏன் இப்படிக் கல்நெஞ்சுக்காரியாக இருக்கிறாள்? இவர்கள் கேட்டதைக் கொடுத்தால் தான் என்னவாம்? “நீங்க வரலொட்டி தானே? கொஞ்சம் இப்படி வரீங்களா? உங்களோட தனியாப் பேசணும்.”என்னை அழைத்த அந்த அழகிய பெண்ணுக்கு முப்பது வயதிற்குள் தான் இருக்கும். நிலவைப் பழிக்கும் அழகிய முகம். அவளைப் பின் தொடர்ந்து சென்றேன். மீனாட்சி சன்னதிக்குப் பின்புறம் சென்ற பிறகுதான் அழைத்தது யார் என்று புரிந்தது. பச்சைப் புடவைக்காரி. “நான் கல்நெஞ்சுக்காரியா? என் பார்வையையும், சக்தியையும் சில நிமிடங்கள் உனக்குத் தருகிறேன்.
அவர்கள் என்ன வேண்டிக்கொள்கிறார்கள் என்று பார்.”என்ன வியப்பு! தாயின் முன் பிரார்த்தனை செய்பவர்களை என்னால் பார்க்க முடிந்தது. அவர்கள் மனதில் இருக்கும் பிரார்த்தனையையும் என்னால் அறிய முடிந்தது. நிலைகொள்ளாமல் தவித்த அந்த நாற்பது வயதுக்காரரின் பிரார்த்தனை இதுதான். “தாயே எனக்குக் கோடி கோடியாகச் செல்வம் வேண்டும். அதன் மூலம் நான் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.” எனக்குச் சிரிப்பு வந்தது. “இவன் இப்போது மத்தியதர வர்க்கத்தில் இருக்கிறான். எண்ணி எண்ணிச் செலவழிக்க வேண்டிய பொருளாதாரச் சூழல். ஒழுங்காகப் படிக்கும் நல்ல பிள்ளைகள். நல்ல மனைவி என்று மகிழ்ச்சியாக இருக்கிறான்.. இவனுக்குத் திடீர் என்று சில கோடிகள் கிடைத்தால் என்ன ஆகும்?. செல்வம் ஒருவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றால் கோடீஸ்வரர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டல்லவா இருக்கவேண்டும்? பணக்காரன்தான் அதிகம் கவலைப்படுகிறான். இவன் கேட்டதைக் கொடுத்து இவன் வாழ்க்கையைக் கெடுக்கவா? இல்லை கொடுக்காமல் விடவா?”“மகிழ்ச்சியாக இருக்கும் செல்வந்தர்களை நான் அறிவேனம்மா.” “அந்தப் பக்குவம் இவனுக்கு இன்னும் வரவில்லை. அது வந்தவுடன் இவனுக்குச் செல்வம் கொடுக்கலாம் என்றிருக்கி றேன்.” அடுத்து அந்த இளைஞனின் பிரார்த்தனை. “தாயே, நான் உலக அளவில் புகழ் பெற்று அமைதியாக வாழ வேண்டும்.” குபுக்கென்று சிரித்தாள் அன்னை. “புகழ் பெற்றபின் எப்படி அமைதியாக இருக்கமுடியும்? கூடவே பாதுகாப்புக்கு ஆட்கள் வேண்டும். இஷ்டப்பட்ட இடத்திற்குச் செல்ல முடியாது. விரும்பியபடி வாழமுடியாது. நாம் எப்படி வாழ்கிறோம் என்று மொத்த உலகமும் பூதக்கண்ணாடியின் மூலம் பார்த்துக்கொண்டிருக்கும். புகழைக் கொடுத்து இவனைக் கெடுக்க வேண்டாம் என்று பார்த்தால் விடமாட்டான் போலிருக்கிறதே!” பச்சைப்புடவைக்காரி பேசிக்கொண்டிருக்கும் போதே கண்ணீர் மல்க நின்றிருந்த பெண்ணின் மனதில் இருந்த பிரார்த்தனை என்னவென்று புரிந்து கொண்டேன். “சரி தாயே., அவர்களை விடுங்கள். இந்தப் பெண்ணின் கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். இவள் என்ன பொன்னையும், பொருளையுமா கேட்டாள்? தாலிப்பிச்சைதானே கேட்கிறாள். இவளுக்காவது கேட்டதைத் தரலாமல்லவா?”
“இவள் அழுவதைப் பார்த்தால் எனக்கும் அவள் கேட்டதைக் கொடுக்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால். . . ஆனால்.. ” “என்ன ஆனால்.. இவள் கர்மக்கணக்கு தடுக்கிறதாக்கும்? அந்தக் கர்மவிதியைச் செய்ததே நீங்கள் தானம்மா.” பச்சைப்புடவைக்காரியின் அழகு முகத்தில் ஒரு அர்த்தம் பொதிந்த புன்னகை.. “இவளின் வலியையும், வேதனையையும் மட்டுமே பார்க்கிறாய். இவள் இப்போது பாடம் கற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதை நீ அறியமாட்டாய். இந்த உலகம் கர்ம பூமி; ஆன்மிகப் பள்ளிக்கூடம். இங்கே நீங்கள் யாரும் இன்பச் சுற்றுலாவிற்காக வரவில்லை எந்த நேரமும் சுகித்திருக்க. இது சொர்க்கம் இல்லை. சுகமான மனித வாழ்க்கை உன் லட்சியம் இல்லை. இருக்கவும் கூடாது. ஆன்மாவின் நீண்ட பயணத்தில் பூவுலக வாழ்க்கை ஒரு சிறு பகுதி மட்டுமே. இதையும் தாண்டி ஆன்மிக வளர்ச்சியும், பரிணாம வளர்ச்சியும் இருக்கிறது. அதை இப்போது உன்னிடம் சொல்ல முடியாது ஆயிரம் ஆயிரம் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லிக் கொடுக்காத பாடங்களை இவள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பமும் வேதனையும் சொல்லிக் கொடுக்கும். என்னால் முடிந்தவரையில் இவளுடைய வேதனையைக் குறைக்கிறேன்.” “இதில் நான் ஏதாவது உதவி செய்யமுடியுமா தாயே?”அன்னை சிரித்தாள். “உன் நண்பன் கண் பார்வையைப் பரிசோதிக்க மருத்துவரிடம் செல்கிறான். அவனைப் பலகையில் உள்ள எழுத்துக்களைப் படிக்கச் சொல்கிறார் மருத்துவர். அவனுக்கு அந்த எழுத்து சரியாகத் தெரியாததால் திணறுகிறான். அருகில் நிற்கும் உனக்கு எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன. நண்பனுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று எழுத்துக்களை அவன் காதில் கிசுகிசுப்பாயா? அப்படிச் செய்தால் அவனுக்குக் கடைசிவரை கண்பார்வை சரியாக இருக்காது.. இவளுக்கு நீ உதவ நினைப்பதும் அதே வகையைச் சேர்ந்ததுதான்.
பார்வை சரியில்லை என்றால் மருத்துவர் இன்னும் சக்தி வாய்ந்த கண்ணாடியைத் தருவார். இவளால் வேதனையைத் தாங்க முடியவில்லை என்றால் நான் இவளுக்கு இன்னும் சக்தி வாய்ந்த மனதைத் தருவேன். இது தான் நான் ஏற்படுத்திய நியதி.” “அப்படியென்றால் துன்பத்தில் இருப்பவர்களுக்கு நான் உதவவே முடியாதா?” “ஏன் முடியாது? அவர்களின் மீது அதிகம் அன்பு காட்டலாம். அப்போது அவர்களுக்குத் துன்பத்தைத் தாங்கும் சக்தி அதிகமாகும். இறைவன் அன்பு மயமானவன் என அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்கலாம். அவர்களின் வளர்ச்சி இன்னும் விரைவாக நிகழும்.” “தாயே... உங்கள் தூய்மையான அன்பைப் புரிந்து கொள்ளாத நாங்கள் தான் கல்நெஞ்சுக்காரர்கள். இந்தப் பாவியின் வாயால் உங்களைக் கல்நெஞ்சுக்காரி என்று சொன்னது பெரிய பாவம் தாயே! என்னை மன்னியுங்கள்.” அவள் மறைந்து விட்டாள். நான் தரிசன வரிசைக்கு ஓடி வந்தேன். இன்னும் திரையை விலக்கவில்லை. ஆனால் மனதில் இருந்த திரை முற்றிலுமாக விலகியிருந்தது.