நபிகள் நாயகம் உத்தம சீலராகப் போற்றப்படுவதற்கு இதோ ஒரு உதாரணம்.. நாயகம், கதீஜா அம்மையாரை மணந்தபோது, ஜைத் என்ற இளைஞர் அடிமையாக கிடைத்தார். நாயகமோ, ஜைத்திற்கு சுதந்திரம் கொடுத்து, தனக்கு சமமாக நடத்தினார். சில நாள் கழித்து ஜைத்தின் தந்தை, மகனை மெக்காவுக்கு அழைத்துச் செல்ல வந்தார். ஆனால், ஜைத்தோ, அவருடன் செல்ல மறுத்தார். “நபிகளார் என்னை மகனைப் போல கவனிக்கிறார்கள். நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன்” என்றார் ஜைத். தந்தை அழைத்தும் கூட, தான் செல்ல வில்லையே என்ற வருத்தம் கூட ஜைத்துக்கு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் என்றால், நாயகத்தின் அன்பை வர்ணிக்க வார்த்தை இல்லை. அது மட்டுமல்ல, தன் அத்தை மகள் மைமூனாவை ஜைத்துக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார் நாயகம். உயர்ந்த குறைஷி குலத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு இணையான குலத்தவருக்கு கூட பெண் கொடுக்க தயங்குவர். அப்படிப்பட்ட நிலையில், அடிமையாக இருந்த ஜைத்துக்கு தன் உறவுப்பெண்ணை திருமணம் செய்து வைத்தார் என்றால் நாயகத்தின் பண்பு எத்தகையது என பாருங்கள். இறுதி வரை ஜைத்தின் மீது அன்பு கொண்டிருந்தார். ஜைத்தின் மகன் உஸமாவையும் பேரன் போலவே வளர்த்தார்.