திருத்தணி கோவில் குடில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2018 01:06
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் குடில்களில், தங்கும் பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம், நேற்று, துவக்கி வைத்தது. திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதி கோவில் நிர்வாகம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தணிகை இல்லத்தில், பக்தர்கள் வசதிக்காக ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கார்த்திகேயன் இல்லத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லாததால், பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்தப்பட்டு, நேற்று முதல், பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு, 500 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.