வடமதுரை:வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நாளை (ஜூலை 27) தேரோட்டம் நடக்கிறது. கடந்த ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. சவுந்தரவள்ளி தாயார் சன்னதியில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. வழக்கமாக மாலை நேரத்தில் நடக்கும் தேரோட்டம் சந்திரகிரகணம் காரணமாக நாளை காலை 9:00 மணிக்கே நடக்கிறது. முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தத்தால் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெறும். ஊர் பிரமுகர்கள் அழைப்பை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் ரத வீதிகள் வழியே நகரை வலம் வரும். தேரோட்டத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் முன்பாக ராகவேந்திரா ஆன்மிக அறக்கட்டளை சார்பாக நாளை காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறையினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.