திருப்பதி: திருப்பதியில் உள்ள விடுதிகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருமலை கோவிலில் வரும் 19ல் மஹா சம்ப்ரோட்சனம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 50 பேர் திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி போலீசாருடன் இணைந்து ரயில்வே ஸ்டஷேன் அருகே உள்ள விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். விடுதியில் தங்கியிருந்தவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெளியே இருந்து விடுதிக்குள் செல்லவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயங்கரவாதிகள் அல்லது நக்சலைட்கள் யாராவது பதுங்கியுள்ளனரா என சந்தேகம் ஏற்பட்டது. நான்கு மணி நேரத்துக்கு மேல் இந்த சோதனை நீடித்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், மஹா சம்ப்ரோட்சனத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகை நடத்தினோம் என்றனர். இதையடுத்து அங்கு நிலவிய பதற்றம் குறைந்தது.