பதிவு செய்த நாள்
31
ஜன
2012
11:01
திருப்புத்தூர் : திருப்புத்தூர் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 51 ஆண்டுகளுக்குப் பின்நேற்று நடந்தது. சுமார் 1300 ஆண்டு பழமையானது ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயில்.1928,1961 ம் ஆண்டுகளில் திருப்பணி நடந்துள்ளது. தற்போது 51 ஆண்டுகளுக்குப்பின் திருப்பணி நடந்துள்ளது. இம்முறை அடித்தளத்திலிருந்து புதிதாகக் கட்டப்பெற்று தனிக்கோவிலாக திருப்பணி நடந்துள்ளது.தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி,சக்கரத்தாழ்வார் சன்னதி, பஞ்சவர்ணத்திலான ராஜகோபுரம்,மகா மண்டபம்,கொடிமரம் ஆகியவையும், ஸ்ரீதேவி, பூதேவி,ஆஞ்சநேயர்,துவாரபாலகர் ஆகிய விக்ரகங்களும் புதிதாகஉருவாக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேகம் :கடந்த ஜன.26ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. சவுமிய நாராயணப் பட்டாச்சார்யர் தலைமையில் பூஜைகள் நடந்தன. 17 குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று முன் தினம் வரை தொடர்ந்து 5 கால சாற்றுமுறை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 6.30 மணிக்கு பிரதான ஹோமம் நடந்தது. தொடர்ந்து 9.15 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டாச்சார்யர்கள் கோபுர,விமானங்களுக்குஎடுத்துச் சென்றனர். தொடர்ந்து வேதமந்திரங்கள் ஒலிக்க வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் ஓம் நமோ நாராயணா கோஷத்துடன் புனித நீரால் கலசங்களில் கும்பாபிஷேகம் நடந்தது. மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.