பதிவு செய்த நாள்
01
பிப்
2012
11:02
நகரி: ஆந்திராவில், வரசக்தி வினாயகர் கோவில் உண்டியலில், வெடிகுண்டு உள்ளதாக புகார் பரவியதையடுத்து, கோவில் வளாகத்தில், பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி வினாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புறம், கண்ணாடி மண்டபம் அருகே உள்ள உண்டியலில், வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, நேற்று தகவல் பரவியது. இதையடுத்து, கோவில் நிர்வாக அதிகாரி சீனிவாசராவ், காணிப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார், வெடிகுண்டு செயலிழக்கும் குழுவினருடன், கோவில் சென்று, உண்டியலின் பூட்டைத் திறந்து, சோதனை செய்தனர். சோதனையில், உண்டியலில் ஒரு எலக்ட்ரானிக் கடிகாரம் இருந்ததைக் கண்டனர். இந்த கடிகாரத்தின், "டிக் டிக் சத்தத்தைக் கேட்டுத் தான், பக்தர்கள், உண்டியலில் வெடிகுண்டு இருந்ததாக நினைத்து பீதியடைந்தனர். கடிகாரத்தைக் கண்டதும், போலீசாரும், பொதுமக்களுடன், நிம்மதியுடன் கோவிலிலிருந்து கிளம்பினர்.