காளாத்தீஸ்வரர் கோயிலில் மழை நீர்க்கசிவால் பாதிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2012 11:02
உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலின் சில பகுதிகளில் மேற்கூரை ஓடுகள் சரியாக பதிக்காததால் மழை நீர் தேங்கி கசிகிறது. உத்தமபாளையத்தில் தென் காளகஸ்தி என்றழைக்கப்படும் காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோயில் உள்ளது. ராகு-கேது தோச பரிகார நிவர்த்தி ஸ்தலமாகும். தினமும் பல மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2004 ல் கும்பாபிஷேகம் நடந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடந்தது. கோயிலின் மேற்கூரைகளில் முழுவதும் புதிதாக ஓடுகள் பதிக்கப்பட்டன. சில பகுதிகளில் ஓடுகள் சரிவர பதிக்கவில்லை. மழைநீர் தேங்கி கோயிலின் உள்ளே நீர்க்கசிவு ஏற்படுகிறது. நடராஜர் சன்னதிக்கு எதிரிலும், ராகு-கேது பிரகாரத்திற்கு உள்ளேயும், மகாலட்சுமி சன்னதிக்கு முன்பும், தியான மண்டப பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நீர்க்கசிவு உள்ளது. பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால் கோயில் உள்மண்டபங்கள் முழுவதும் சேதமடையும் நிலை உள்ளது. இந்து அறநிலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.