ஏழைப்பாட்டி ஒருவருக்கு காஞ்சி மகாசுவாமிகள் மீது அளவற்ற பக்தி. தரிசிக்க வரும் போதெல்லாம் பிரசாதமாகப் பழங்கள் கொண்டு வருவார். பாட்டியின் போக்குவரத்துக்கான செலவை கொடுத்து அனுப்பச் சொல்வார் சுவாமிகள். அன்றும் அப்படி தான் நடந்தது. சுவாமிகள் பணம் கொடுக்க சிப்பந்திக்கு உத்தரவிட்டார். இடைமறித்த பாட்டி “சுவாமி... எனக்கு வேறு ஒன்று வேண்டும். கூடவே நான் ஒன்று கொண்டு வந்திருக்கிறேன், அதையும் ஏற்று அருள்புரிய வேண்டும்” என்றார். பாட்டியின் புதிரான பேச்சு கேட்டு சுவாமிகள் சிரித்தார். “முதலில் உனக்கு என்ன வேண்டும்?” என கேட்டார். “நான் ஜபம் செய்ய ருத்ராட்ச மாலை ஒன்று வேண்டும்” என்றார் பாட்டி. சுவாமிகள் ருத்ராட்ச மாலையை சிப்பந்திகள் மூலம் வரவழைத்துக் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட பாட்டி, தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். “சரி...எனக்கு ஏதோ கொண்டு வந்ததாகச் சொன்னாயே... அது என்ன?” என்றார் சுவாமிகள்.
பாட்டி தன்னிடம் இருந்த சம்புடத்தை சுவாமிகளிடம் கொடுத்தார். பாட்டி தன் கையால் தயாரித்த அப்பளம், வடகங்கள் அந்த சம்புடம் நிறைய இருந்தன.‘இதை எல்லாம் அன்போடு ஏற்றுக் கொண்டேன். உனக்கு மகிழ்ச்சி தானே?” பாட்டியும் ஆர்வமுடன் தலையசைத்தார். சுவாமிகள் “நான் சொன்னேன் என்பதற்காக பெற்றோர் பலரும் தங்களின் குழந்தைகள் வேதம் படிக்க அனுப்புகிறார்கள். அந்தக் குழந்தைகள் எளிமையுடன் வாழ்ந்து ஆர்வமுடன் வேதம் படிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அப்பளம், வடகத்தைப் பார்த்தே பலநாள் ஆகியிருக்கும். இப்போதே எனக்காக நீ ஒரு உதவி செய்வாயா? சின்னக் காஞ்சிபுரத்திலுள்ள நம் மடத்துப் பாடசாலை இருக்கிறது. அங்கு போய் நான் சொன்னதாக சொல்லி இந்த வடகத்தை கொடுக்க வேண்டும். வேதம் படிக்கிற குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தால் அதன் பயனாக இந்த உலகமே நன்மை பெறும்” என்றார். வேதம் படிக்கும் குழந்தைகள் மீது சுவாமிகள் கொண்டிருந்த அன்பு பாட்டியின் மனதை உருக்கியது. ’இதோ செய்கிறேன் சுவாமி’ என்று சொல்லி சின்ன காஞ்சிபுரம் புறப்பட்டார் பாட்டி.