பதிவு செய்த நாள்
07
செப்
2018
12:09
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று (செப்.,6ல்) அதிரடி சோதனை நடத்தினர்.
ஸ்ரீரங்கம், ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் சிலை மாற்றப்பட்டுள்ளது. புருஷோத்தம பெருமாள், மூலஸ்தானத்தில் உள்ள சாலக்கிராமங்கள் மாயமாகி விட்டன. பெரும்பாலான சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அது பற்றி விசாரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருந்ததாவது: சிலை கடத்தல் பிரிவு போலீசார், விசாரித்து, ஆறு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறியிருந்தது.
அதன்படி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் மற்றும் மூன்று இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர், நேற்று (செப்., 6ல்) அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்று (செப்., 6ல்) பிற்பகல், 1:45 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் சன்னதியில் துவங்கி, தொடர்ந்து, ரங்கநாதர் சன்னதி வரை, ஆய்வு நடத்தினர்.
பின், ஆயிரங்கால் மண்டபத்தின் ஒரு பகுதியில் மூடி வைக்கப்பட்டிருந்த நாராயணர் மற்றும் நரசிம்மர் சிற்பங்களை பற்றி, கோவில் இணை ஆணையரிடம் விசாரித்தனர்.
பரமபதநாதர் சன்னதிக்கு சென்ற, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல், நுழைவு வாயிலில் சுதையால் செய்து, பொருத்தப்பட்டிருந்த சங்கு, சக்கரங்களை மாற்றி, கருகற்களால் வைத்திருப்பது பற்றியும், தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டது பற்றியும் கேள்வி எழுப்பினார்.
இறுதியில், சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு மீண்டும் சென்ற, ஐ.ஜி., பொன். மாணிக்கவேலிடம், பக்தர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
திருவரங்க அமுதனார் சன்னதியில் பீடம் இல்லை; சிங்கம் சிலை மாயமாகி விட்டது. புதிதாக வைக்கப்பட்ட புருஷோத்தம பெருமாள் சிலையின் உயரம் அதிகமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அது பற்றி, பக்தர்கள் சிலரிடம் விசாரணை நடத்திய, பொன். மாணிக்கவேல், மாலை, 3:50 மணிக்கு விசாரணையை முடித்து புறப்பட்டார்.ஆய்வு குறித்து, ஏ.டி.எஸ்.பி., ராஜாராம் கூறியதாவது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆய்வுப்பணி துவக்கப்பட்டுள்ளது. தற்போது, 25 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன, மீதமுள்ள, 75 சதவீத பணிகளை முடிக்க, தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரின் ஆய்வால், அப்போது கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் மட்டும், தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள், சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டனர். சோதனையையொட்டி, கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.