பதிவு செய்த நாள்
02
பிப்
2012
11:02
நகரி: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விற்பனை செய்யப்படும் வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயார் உருவம் பொறித்த தங்க டாலர்களை, விலை குறைத்து விற்பனை செய்ய, தேவஸ்தான நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. திருப்பதி வெங்டேச பெருமாள் கோவில் உண்டியலில், பக்தர்கள் செலுத்தும் தங்க ஆபரணங்களை உருக்கி, 22 காரட் மதிப்புடன், ஒரு பக்கம் மூலவர் வெங்கடேச பெருமாளின் உருவம், மறுபக்கம் பத்மாவதி தாயாரின் உருவத்துடன், தங்க டாலர்கள் செய்யப்படுகின்றன. இவை, திருமலையில் உள்ள ஆந்திர வங்கி கிளை, திருச்சானூரில் உள்ள சிண்டிகேட் வங்கி கிளையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விற்கப்படுகின்றன. இந்த டாலரின் விலைக்கும், மார்க்கெட் விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளதால், விற்கப்படும் விலையை குறைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். தங்க டாலர் விலை நிர்ணயம் குறித்து, மறு பரிசீலனை செய்யும்படி, தேவஸ்தான நிதிப் பிரிவிற்கு, பக்தர்களின் கோரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது. இதுவரை, தங்க மார்க்கெட் விலையுடன் சேதாரம், செய்கூலி, இன்சூரன்ஸ், போக்குவரத்து மற்றும் நிர்வாகச் செலவுகள் சேர்த்து, விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனால், டாலர் விற்பனை, 15 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும், ஆண்டிற்கு 20 கோடி ரூபாய் வரை டாலர் விற்கப்படும் நிலையில், நிர்வாகச் செலவு 15 சதவீதத்தை குறைத்தால், தேவஸ்தானத்தற்கு ஆண்டிற்கு, 3 கோடி ரூபாய் வரை, வருமான இழப்பு ஏற்படும் எனவும், அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர். திருப்பதி தேவஸ்தானம், வியாபார நிறுவனம் அல்ல. ஆதலால், நிர்வாகச் செலவை குறைப்பதால், தங்க டாலர்கள் வாங்கும் பக்தர்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் விலை குறையும் வாய்ப்புள்ளதாக, தேவஸ்தான நிதிப்பிரிவு மேற்கொண்ட முடிவு, சமீபத்தில் நடந்த தேவஸ்தான போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பின், 10 கிராம் டாலர் மீது, 500 ரூபாய், 5 கிராம் டாலர் மீது, 300 ரூபாய், 2 கிராம் டாலர் மீது, 200 ரூபாய் என்ற கணக்கின்படி, நிர்வாகச் செலவை நிர்ணயம் செய்து, டாலர்களை விற்பனை செய்ய, தேவஸ்தான அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இறுதியாக ஒப்புதல் வந்தால், வங்கி கிளைகள் மூலம், புதிய விலையில் டாலர்கள் விற்கப்படும் என தெரிகிறது.