பதிவு செய்த நாள்
02
பிப்
2012
11:02
திருநெல்வேலி:பாளை., தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோயில் 23வது ஆண்டு வருஷாபிஷேக விழா, திருத்தேரோட்டம் வீதியுலா நாளை (23ம் தேதி) துவங்குகிறது. பாளை., தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நாளை (3ம் தேதி) மாலை 3 மணிக்கு மகா கணபதி அணுக்கையுடன் துவங்குகிறது. விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், சுக்தாதி ஜெபம், கணபதி உபநிஷத் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு தர்மலிங்கம், கணேசன் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர இசை நடக்கிறது. இரவு 7.45 மணிக்கு வேதிகை கும்ப ஆவாகன பூஜைகள், தீபாராதனை, சதுர்வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் நடக்கிறது. 4ம் தேதி காலை 5.30 மணிக்கு யாகம், ஹோமம் பூஜை, பூர்ணாஹூதி, காலை 8.30 மணிக்கு விமான கலசாபிஷேகமும் நடக்கிறது. காலை 8.45 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் 32 வகையான திரவியங்களால் மகா அபிஷேகமும், 1008 சங்காபிஷேகமும் நடக்கிறது. 108 கலசங்களில் பால் சீராபிஷேகமும், கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை, சதுர்வேத பாராயணம், பஞ்சபுராணம் நடக்கிறது.4ம் தேதி மாலை 5.30 மணிக்கு விநாயகர் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. வெங்கட சுப்பிரமணியபட்டர் தலைமையில் வேத பாராயணமும், மலேசியா செல்லப்பா, தர்மலிங்கம், கணேசன் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர இன்னிசையும் நடக்கிறது.திருத்தேரோட்டத்தின் போது மகாராஜநகர் ஓய்வுபெற்ற மின்சார வாரிய தலைமைப் பொறியாளர் சுப்பிரமணியபிள்ளை தலைமையில் நெல்லை டவுன் முத்துக்குமாரசாமி குழுவினரின் பன்னிரு திருமுறை விண்ணப்பம் நடக்கிறது.ஏற்பாடுகளை விக்ன விநாயகர் ஆலய வழிபாட்டுக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.