பதிவு செய்த நாள்
18
செப்
2018
02:09
கோவை:கோவையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 226 விநாயகர் சிலைகள், நேற்று (செப்.,17ல்) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன.
கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 384 சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டன. முதல்கட்டமாக குறிச்சி குளம், குனியமுத்தூர், முத்தண்ணன் மற்றும் சிங்காநல்லூர் குளங்களில் கடந்த, 15ம் தேதி, 158 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, மீதமுள்ள சிலைகள் நேற்று (செப்., 17ல்)விசர்ஜனம் செய்யப் பட்டன. இதற்காக இந்து முன்னணி, விவேகானந்தர் பேரவை, ராஷ்டீரிய இந்து பரிஷத், தமிழ்நாடு ராமர் சேனா அமைப்பு, இந்து மக்கள் கட்சி(தமிழகம்), இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில், சிலைகள் நேற்று செப்., 17ல் மதியம் முதல் ஊர்வலமாக, முத்தண்ணன் குளம் எடுத்து செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன. மொத்தம், 226 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
ஊர்வலத்தை முன்னிட்டு, மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில், துணை கமிஷனர் லட்சுமி மேற்பார்வையில், போலீசார் மற்றும் ஊர்க்காவல்படையினர் என, 1,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நீச்சல் தெரிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தப்பட்டனர். விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு, முத்தண்ணன் குளத்தை சுற்றிலுள்ள பகுதிகளில், போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. லாரி போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.