பதிவு செய்த நாள்
18
செப்
2018
02:09
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நேற்று(செப்., 16ல்), கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13ம் தேதி கொண்டாடப்பட்டது. குடியிருப்போர் நல்வாழ்வு சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
ஐந்தாம் நாளான நேற்று (செப்., 16ல்), இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில், விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் துவங்கியது.
காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, பட்டேல் சாலை, பழைய சாராய ஆலை வழியாக, கடற்கரைக்கு மேள தாளம், ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.
கடற்கரை சாலை பழைய கோர்ட் அருகே, ராட்சத கிரேன் மூலம், பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. 200க்கும் மேற்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சிலைகளை கடலுக்கு கொண்டு செல்ல, பொதுப்பணித்துறை சார்பில், கடற்கரை பகுதியில் மணல் கொட்டி வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. விஜயர்சன நிகழ்ச்சியின்போது வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.
இந்து முன்னணி தமிழ் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், விநாயகர் சதுர்த்தி விழா பேரவை தலைவர் குமரகுரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சீனியர் எஸ்.பி., அபூர்வா குப்தா தலைமையில், எஸ்.பி,. மாறன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலோர காவல்படையினர் கடலில், படகுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதே போன்று, புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு, தந்திராயன்குப்பம், நல்லவாடு உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று (செப்., 16ல்) விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.