பதிவு செய்த நாள்
20
செப்
2018
11:09
பெண்ணாடம்: திருமலை அகரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வநாதர் கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாடம், திருமலை அகரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவில் உள்ளது. கோவிலில், சிவன், விஷ்ணு மற்றும் விசாலாட்சி அம்மன் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவிலில் விநாயகர், முருகன், கால பைரவர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் உள்ளன.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் சிவராத்திரி, பிரதோஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். பராமரிப்பின்றி உள்ள இக்கோவில் பாழடைந்து, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, அரச மரக்கன்றுகள் வளர்ந்து, சுற்றிலும் முட்புதர்கள் மண்டி, கோபுர சிலைகளும் உடைந்துள்ளன. இங்கு தற்போது ஒருகால பூஜை மட்டுமே நடக்கிறது. இந்நிலையில், கடந்த 2007ல் கோவில் திருப்பணிக்கு பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் திருப்பணியை துவங்காததால் 2010ல் மீண்டும் அந்த நிதி பழனி கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. கோவிலை புனரமைக்கக் கோரி கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. எனவே, திருமலை அகரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஸ்வநாதர் கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.