பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
வீரவநல்லூர் :திருப்புடைமருதூர் கோமதிஅம்பாள் உடனுறை நாறும்பூநாதசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று நடந்தது. தலசிறப்பு பெற்ற திருப்புடைமருதூர் கோமதிஅம்பாள் உடனுறை நாறும்பூநாதசுவாமி கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேக, அலங்கார தீபாராதனையும், காலை, இரவு பல்வேறு வாகனங்களில் வீதிஉலாவும் நடக்கிறது. 9ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. நாறும்பூநாதரும், கோமதிஅம்பாளும் தனித்தனி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி அருள்பாலிக்க, கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகர் வழிபாட்டுக்குழு மற்றும் வீரவநல்லூர் நமச்சிவாய அருட்பணி மன்ற அன்பர்கள் தேவாரம் பாட, மேளதாளங்கள் முழங்க முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். தேர் அசைந்தாடி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து நிலையை வந்தடைந்தது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியான தைப்பூச தீர்த்தவாரி இன்று (7ம் தேதி) மதியம் 1 மணிக்கு நடக்கிறது. இரவு தெப்ப உற்சவமும், அடுத்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடக்கிறது. விழாவை காண வீரவநல்லூர், முக்கூடல், நெல்லையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.