பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
திசையன்விளை : உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலில் நேற்று 5004 சிவலிங்க பூஜை நடந்தது. இன்று (7ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. தென் மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் சிறப்பு அபிஷேகங்கள், பல்வேறு பூஜைகள், விநாயகர் வீதியுலா, சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை வெற்றிவேர் மற்றும் கஜ, அன்ன, இந்திர, விமான, காமதேனு, குதிரை, கைலாய பர்வதம் ஆகிய வாகனங்களில் வீதியுலா, சேர்க்கை, தீபாராதனை, சமய சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. எட்டாம் திருவிழாவான நேற்று காலையில் சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட, உச்சிகால பூஜை, விநாயகர் வீதியுலா நடந்தது. மாலையில் உவரி கடற்கரை அரங்கில் சிவசக்தி மகளிர் மன்றம் சார்பில் 5004 சிவலிங்க பூஜை நடந்தது. சிவலிங்க பூஜையை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், தேர் திருப்பணிக்குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்கம் உடையார், பொருளாளர் சுவாமிஅடியான் நாடார், மகளிர் குழு தலைவி கஸ்தூரி, செயலாளர் ரனிதா, பொருளாளர் அனிதா, முன்னாள் கவுன்சிலர் விக்டோரியா, முன்னாள் பஞ்.,தலைவர் ராஜன், செல்வத்திருமதி, கீர்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு சட்டம் கால் சப்பர வாகனத்தில் சுவாமி அம்பிகை பச்சை சாத்தி வீதியுலா, சேர்க்கை தீபாராதனை மற்றும் சமய சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. 9ம் திருவிழாவான இன்று (7ம் தேதி) காலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து கோயிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை தேருக்கு புறப்பாடு, 6 மணிக்கு ரதாரோகனம், ரதோற்சவம், முதல் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. தேரோட்ட விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் கலந்து கொண்டு தேர் கொட்டகைக்கு அடிக்கல் நாட்டுகிறார். தேர்நிலை நின்றவுடன் தீர்த்தவாரி நடக்கிறது. பின்னர் மதியம் அன்னதானம், மூலவர் உற்சவர் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு சாயரட்சை, ராக்கால பூஜை, ரிஷப வாகனத்தில் சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை வீதியுலா, வாணவேடிக்கை, சமய சொற்பொழிவுகள், அசத்த போவது யாரு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10வது திருவிழாவான நாளை (8ம் தேதி) தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.