பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
திருத்தணி : திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது. வழக்கத்தை விட, இந்தாண்டு பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். பொது வழியில், 2 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசித்தனர். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, நேற்று காலை 8 மணி, மதியம் 12 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, தேன் மற்றும் அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக மலைக் கோவிலுக்கு வந்தனர். சிலர் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டையடித்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். மூலவரை தரிசிக்க, பொது வழியில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர். பக்தர்களின் வசதிக்காக, 100, 50, 25 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தனபால் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். பொன்னேரி அருட்பிரகாச வள்ளலார் தன் குழந்தை பருவத்தில், அவரது தாயார் சின்னம்மையாருடன் பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமத்தில் தங்கியிருந்தார். அவர் வாழ்ந்த இடத்தில் சின்னம்மையார் இல்லம் கட்டப்படுகிறது.
அங்கு நித் யஜோதியும், பசியாற்றுவித்தலும் தினசரி நடந்து வருகிறது. தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, இன்று காலை 6 மணிக்கு, அகவல் பாராயணம், 8.30 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றுதல், 10.30 மணிக்கு சொற்பொழிவும், 12 மணிக்கு பசியாற்றுவித்தலும் நடைபெற உள்ளது. தைப்பூசத் திருவிழா ஏற்பாடுகளை சின்னகாவணம் திரு அருட்பிரகாச வள்ளலார் அருளாட்சி திருச்சங்கம் சின்னம்மையார் இல்லத் திருப்பணிக் குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்.