பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
திருத்தணி : திருத்தணி அடுத்த, குருவராஜப்பேட்டையில் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 3.50 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, புதிய விமானம் அமைக்கப்பட்டது. இக்கோவிலில், மூன்று யாக சாலைகள் அமைத்து, 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜை நேற்றுமுன்தினம் துவங்கியது. நேற்று காலை நவக்கிரக ஹோமம், சாந்தி ஹோமம் மற்றும் நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதிய விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம், மாலை 5 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. திருத்தணி, குருவராஜப்பேட்டை, கெடவாரிகண்டிகை, பெரியகடம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து திரளான மக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.