பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் ஓய்வு பெற்ற ஊழியர்களிடம் சங்க நிர்வாகிகள் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், 34 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறையினர்
பறிமுதல் செய்தனர்.பழநி கோயிலின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 2,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் நவம்பரில் அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பழநி கோயில் தங்கும் விடுதியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில் நேற்று 1 நவம்பர். ஆள் அறிதல் புதுப்பிப்பு முகாம் நடந்தது. அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஊழியர் சங்க நிர்வாகிகள் பணம் வசூலித்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., சத்யசீலன், இன்ஸ்பெக்டர் கீதா குழுவினர் சோதனை நடத்தி 34ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறுகையில், ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் கிடைக்க லஞ்சம் வசூலிப்பதாக புகார் வந்தது. ஓய்வுபெற்ற ஊழியர்களிடம் பணம் பறிமுதல் செய்துள்ளோம். சில அலுவலர் களிடம் விசாரித்துள்ளோம் என்றனர்.பழநி கோயில் ஓய்வுபெற்ற ஊழியர் சங்க செயலர் கோபால் கூறுகையில், சங்கத்தில் 145பேர் உள்ளனர். ஆண்டு சந்தா 100 ரூபாய் வசூலித்தோம். சங்கத்தில் உறுப்பினராக இல்லாத சிலர், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தவறான புகார் தந்துள்ளனர். யாருக்கும் லஞ்சம் தரவில்லை. சந்தா வசூலுக்கு ஆவணங்கள் உள்ளன, என்றார்.