மனிதன் செல்வத்தையும், புகழையும் மட்டும் நோக்கமாகக் கொண்டு வாழ்கிறான். அவன் இறையருளையும் தேட வேண்டும். எத்தனையோ மகான்கள் புகழை விரும்பாமல், இறைவனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்திருக்கின்றனர். இதுபற்றி பெரியவர் சொல்வதைக் கேட்போமே. தியாகையர்வாள் (திருவையாறு தியாகராஜ சுவாமிகள்) சரபோஜி ராஜா கூப்பிட்டபோது, ராஜாவுடைய நிதி சவுக்கியம் தருமா? ராமனுடைய சந்நிதி சவுக்கியம் தருமா?, என்று பாடினதை எல்லாரும் கொண்டாடிச் சொல்கிறோம். இப்படியே இன்னும் அநேக மகான்களும் ஈஸ்வரனைத் தவிர ராஜா, கீஜா யாரைப் பற்றியும் பாடுவதில்லை என்ற தங்கள் அபிப்ராயத்தை வெளியிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன், என்று நம்மாழ்வார் சொல்லியிருக்கிறார். புலவர்களை எல்லாம் பார்த்து சுந்தரமூர்த்தி சுவாமிகள், அவனையும் இவனையும் எதற்காகப் பாடுகிறீர்கள்? சிவனையே பாடுங்கள் என்று அறிவுறுத்தி ஒரு முழுப்பதிகமே பாடியிருக்கிறார். அதில், கொடுக் கிலாதானை ஏன் பாரிவள்ளல் என்று புகழ வேண்டும்? என்று கேட் டிருக்கிறார். சைவத்தை அப்பர் சுவாமிகள் பரப்புகிறாரே என்று கோபம் கொண்டு, ஜைனமதத்தில் இருந்த மகேந்திரவர்மப் பல்லவன் அவரைத் தண்டிப்பதற்காகஆள் அனுப்பிய போது அவர், நாமார்க்கும் குடியல்லோம் என்று பாடியதைவிட, மகான்களின் வீரதீரத்துக்கு உதாரணம் தேவை யில்லை. -காஞ்சி பெரியவர்