பதிவு செய்த நாள்
04
டிச
2018
02:12
அன்னூர்:அன்னூர் மாரியம்மன் கோவிலில் திருப்பணி முடிந்து ஓராண்டாகியும், கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அனுமதி தராமல், இழுத்தடித்து வருகிறது.அன்னூர் - தென்னம்பாளையம் ரோட்டில், 50 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது.
கும்பாபிஷேகம் நடந்து, 15 ஆண்டுகளாகி விட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன், திருப்பணி துவங்கியது. மண்டபம், விநாயகர், பாலமுருகனுக்கு கோபுரம் அமைக்கப்பட்டன. மூலவர் கோபுரத்தில் புதிய சிலைகள் அமைக்கப்பட்டன. தரை மற்றும் சுவர்கள் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் மட்டும் இன்னும் நடக்காமல் உள்ளது.பக்தர்கள் கூறியதாவது:திருப்பணி முடிந்து, ஓராண்டாகி விட்டது. கும்பாபிஷேகத்துக்கு அனுமதி கேட்டோம். கோவையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்திலும் மனு கொடுத்தோம். கடந்த ஆறு மாதமாக, 10 முறை இணை ஆணையர் அலுவலகத்தில் சென்று முறையிட்டு விட்டோம். ஆனால், அனுமதி தராமல் இழுத்தடிக்கின்றனர்.தொகுதி எம்.எல்.ஏ.,வும் சபாநாயகருமான தனபாலிடம், நேரடியாக இருமுறை மனு கொடுத்தோம். நடவடிக்கை இல்லை. சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் சென்று, மனு கொடுத்துள்ளோம். இதன் பிறகாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இக்கோவிலில், 10 நாட்கள் திருவிழா நடக்கும். தினமும் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி நடக்கும். திருப்பணி காரணமாக, நான்கு ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடத்தவில்லை. கும்பாபிஷேகத்துக்கு அனுமதி தராவிட்டால், பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.