மந்தி பாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத் தரவின் அணையான் அந்தி போல்நிறத் தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோரெழில் உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத் தின்னுயிரே.
சதுரமா மதிள்சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து உதிர வோட்டிஓர் வெங்கணை உய்த்தவ னோத வண்ணன் மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத் தம்மான் திருவயிற்று உதரபந்தனம் என்னுள்ளத்துள் நின்று உலாவுகின்றதே.
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான் கோர மாதவம் செய்தனன் கொலறியேன் அரங்கத் தம்மான்திரு வார மார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
பரிய னாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன் முகத்து கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரிய வாய் கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே.
ஆலமாமரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத் தரவின் அணையான் கோலமாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர் எழில் நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.