பதிவு செய்த நாள்
25
டிச
2018
02:12
திருப்பூர்:பொங்கலூரில் நடந்து வரும், மகாலட்சுமி யாக பெருவிழாவின் ஒரு பகுதியாக, ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நேற்று (டிசம்., 24ல்) நடைபெற்றது.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து எடுத்துவரப்பட்ட, எம்பெருமாள் மற்றும் ஆண்டாள் தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீமத் அகோபில மடம் ஆஸ்தான ஜோதிட வித்வான், ராஜகோபாலன் தலைமை வகித்தார்.அத்யன பட்டர் திருக்கோட்டியூர் மாதவன் சுவாமி, திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தார்.
பட்டாச்சார்யார்கள், மாற்று மாலைகளை கையில் ஏந்தி, நடனமாடி, பாசுரங்கள் பாடியபடி, மேடையை வலம் வந்து, ஸ்ரீஆண்டாள் தாயாருக்கும், ரங்கமன்னாருக்கும், மாலைகளை அணிவித்து, மகா ஆரத்தி செய்தனர்.இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன், மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், மூவேந்தர் முன்னேற்ற கழக நிர்வாகி சேதுராமன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தலைவர் செல்வராஜ் உட்பட, ஏராளமானோர் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.
வளாகத்தில் ஐ.ஜி., ஆய்வு இன்று (டிசம்., 25ல்), ஒரு லட்சம் குடும்பத்தினர் பங்கேற்கும், சோடஷ மகாலட்சுமி மகாயாக பெருவிழா நடக்க உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கூடுவதால், ஐந்து மாவட்டங்களை சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை, ஐ.ஜி., பெரியய்யா, எஸ்.பி., கயல்விழி ஆகியோர், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.