பதிவு செய்த நாள்
25
டிச
2018
02:12
திருப்பூர்: யாக விழா நடக்கும் வளாகத்தில், காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் கோமாதா பூஜை துவங்கியது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். கோவை கவுமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி, திண்டுக்கல் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமி, பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி பூசப்பன், பழநி புலிப்பாணி சித்தரின் ஆறுகால் பீடம், 13வது பட்டம் புலிப்பாணி பாத்திர சுவாமிகள், கன்னியாகுமரி சைனதன்யானந்த மஹராஜ் சுவாமி முன்னிலை வகித்தனர்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையிலான குழுவினர், கோமாதா யாகசாலை பூஜைகளை நிகழ்த்தினர். பல்வேறு வழிபாட்டுடன் கோமாதா யாகவேள்வி நடந்தது. பஞ்சகவ்ய தாய், பசுத்தாய், ஜீவாமிர்த மாதா, குலமாதா, கோமாதா, ஆவினம், நந்தினி, காமதேனு என, எட்டு வரிசைகள் அமைக்கப்பட்டு, மாடுகள் தடுப்புகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.பரிவட்டம் கட்டி பூஜைஅனைத்து பசுக்களுக்கும், பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து, சந்தனம், மஞ்சள், குங்குமும் வைத்து, அட்சதை தூவி பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து, யாகசாலையில் இருந்த புனித தீர்த்தம், அனைத்து மாடுகளுக்கும் தெளிக்கப்பட்டது.
தீவிர பரிசோதனை கோமாதா பூஜைக்காக, மொத்தம், 1,620 நாட்டு பசுமாடுகள் அழைத்து வரப்பட்டன. கால்நடை பராமரித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையிலான டாக்டர் குழுவினர், தீவிரமாக பரிசோதனை செய்த பின்பே, மாடுகளை வளாகத்துக்குள் அனுமதித்தனர். மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க முன்னேற்பாடாக, தனியார் மற்றும் அரசு டாக்டர்கள் முகாமிட்டிருந்தனர்.
ஒரு லட்சம் பக்தர்கள்யாகசாலை வழிபாட்டின் இரண்டாம் நாளான நேற்று (டிசம்., 24ல்), ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். சூலூர் கே.எம்.சி.எச்., ரேவதி மருத்துவமனை உட்பட, தனியார் மருத்துவமனைகளும், பொங்கலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவ மனை சார்பில், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. 15க்கும் அதிகமான ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தன.
பெண்களே கவனிங்க...!இன்று (டிசம்., 25ல்), நடக்கவுள்ள நிகழ்ச்சியில், மகாலட்சுமி பூஜை செய்ய, டோக்கன் பெற்றுள்ள பெண்கள், பூ, பழம், தரைவிரிப்பு, பூஜை தட்டு, வெற்றிலை பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். பூஜை நடத்த, சிறிய மகாலட்சுமி சிலை, மஞ்சள் அரிசி, விரலி மஞ்சள், அர்ச்சனை குங்குமம், சிறிய தண்ணீர் பாட்டில் ஆகிய, விழாக்குழு சார்பில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியும்... சொற்பொழிவும்...! இன்று, மதியம், 2:00 மணிக்கு, மகாயாக பெருவிழா நடக்கிறது. வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில் ஸ்ரீநாராயணி பீடம் சக்தி அம்மா, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்க உள்ளனர். இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன், பொது செயலாளர் முருகானந்தம், மாநில அமைப்பாளர் பக்தவத்சலம் ஆகியோர் பேசுகின்றனர்.
இந்திய வரலாற்றில் பதிவானதுவிழாவை சிறப்பிக்கும் வகையில், இந்திய தபால் துறை சார்பில், விழா நினைவு தபால் உறை மற்றும் ஸ்டாம்ப் நேற்று (டிசம்., 24ல்), வெளியிடப் பட்டது. நிகழ்ச்சியில், தபால் துறை தலைவர் அம்பேஸ் உபமன்யு, விழா நினைவு தபால் உறையை வெளியிட, மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பெற்றுக்கொண்டார். இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் முன்னிலையில், ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரி ஸ்ரீ விவேகானந்த ஆசிரமத்தை சேர்ந்த சுவாமி சைதன்யானந்த மஹராஜ் பேசுகையில், தியாகத்தையும், தூய்மையையும் உணர்த்துவதால், இந்தியாவில் காவிக்கொடி போற்றப்படுகிறது. இந்துக்கள் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருந்து, சபரிமலையின் புனிதத்தை காக்க வேண்டும், என்றார்.