* முடிந்த நற்செயல்களில் ஈடுபடுங்கள். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார். * நம் துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நெஞ்சில் நிம்மதி பிறக்கும். * கடவுளுக்கு நன்றி சொல்லும் நோக்கில் தான் கோயில் வழிபாட்டு முறைகளை பெரியவர்கள் ஏற்படுத்தினர். * கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் புண்ணியம் சேரும். துன்பத்தில் மட்டுமில்லாமல் கடவுளை, இன்பத்திலும் மறப்பது கூடாது. * மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே பேசும் சக்தியை கடவுள் கொடுத்திருக்கிறார். * கடவுளை வழிபடுவதால் மனம் தூய்மை பெறுவதோடு புண்ணியமும் உண்டாகிறது. * பூஜை செய்வதை விட, சாப்பிடும் போது மனதிற்குள், ’எனக்கு உணவு கொடுத்த கடவுளுக்கு நன்றி’ என்று சிந்திப்பது சிறந்தது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் கடவுளுக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். * மனமே கடவுளின் இருப்பிடம். அதைப் பாதுகாக்க தினமும் தியானம் செய்யுங்கள். * எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு நன்மை செய்வது புண்ணியம். சுயநலத்துடன் ஆசையால் செய்யும் அனைத்தும் பாவம். * உடலால் தீமை செய்வது போலவே மனதால் தீமையைச் சிந்தித்தாலும் பாவமே. * அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும். * ’மவுனம் கலக நாஸ்தி’ என்று சொல்வர். மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது. * பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் நல்ல பண்பு ஏற்படும். * கோபம் என்னும் எதிரிக்கு மனதில் இடம் இல்லாவிட்டால் நிம்மதியாக வாழலாம். * பூமியை விட்டுச் செல்லும் முன் ’என்னிடம் பாவமே இல்லை’ என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய். * வாக்கு, மனம், உடல் இந்த மூன்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும். * உலகிலுள்ள எல்லாம் ஒன்றே என்ற தெளிவு வந்து விட்டால் தீயகுணங்கள் யாவும் மறையும்.- வழிகாட்டுகிறார் காஞ்சிப்பெரியவர்