பதிவு செய்த நாள்
04
ஜன
2019
03:01
போடி: தேனி மாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வில், ஆண்டிபட்டி அருகே பிச்சம்படடியில் ஊர் நாயக்கர் காலத்து 15, 16ம் நூற்றாண்டின் சதிக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது:
ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் மண்ணில் புதைந்த நிலையில் நாயக்கர் காலத்தை சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.மூன்றடி உயரம், இரண்டரை அடி அகல முடைய கல்லில் வீரன் ஒருவன் பீடத்தில் வலக்காலை இடப்பக்கமாக மடக்கியும், இடக்காலை தொங்கவிட்டு, சுகாசன அமர்வுக் கோல நிலையில் புடைப்பு சிற்பமாக
செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் வலக்கையில் கட்டாரி எனும் ஆயுதம் உள்ளது.
அர்த்த சந்திர ஹஸ்தம் முத்திரையுள்ள இடது கையில் மலர்மொட்டு போன்ற பொருள் உள்ளது. வீரனுக்கு வலப்பக்க கொண்டையும், காதுகளில் பத்ரகுண்டலம், கழுத்தில் சரப்பளி, அம்புச்சரம், மணிமாலை போன்ற ஆபரணங்கள் உள்ளன.
மேலும் இரண்டு கை புஜங்களிலும் இரண்டுக்குடைய கடகவளை காணப்படுகிறது. நாயக்கர் காலத்தை சார்ந்த சிற்பங்களில் வடிவமைக்கப்படும் சுருள் சுருளான அமைப்புடைய பட்டாடை அமைப்பு இவ்வீரனுக்கு இடைமுதல் கால்வரையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இடைச் சுற்றி அரைஞாண் எனும் ஒட்டியாணம் உள்ளது.
வீரனுக்கு வலப்பக்கம் மனைவி சமபங்கு நிலையில் நின்றுள்ளபடி புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளார். வலக்கையை முன்பக்கம் மடக்கி கடக ஹஸ்தம் முத்திரையில் மலர் மொட்டும், அர்ந்த சந்திர ஹஸ்தம் அமைதியில் உள்ள இடக்கையில் உருண்டையான பொருளும் பிடித்தபடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பெண் தன் கணவன் இறந்த
பின் சதி எனும் உடன்கட்டை ஏறியதை அடையாளப்படுத்தும் விதமான சிற்பமாக காட்டப் பட்டுள்ளது. வீரனுக்கு இடப்பக்கம் நின்றுள்ள பணிப்பெண் வலது கையால் சாமரம் வீசுவது போன்றும், இடக்கையில் நீர்குவாளை அல்லது மதுக்குடம் பிடித்த நிலையில் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்பெண்களுக்கும் குந்தளம் கொண்டை, காதுகளில் பத்ரகுண்டலம், கழுத்தில் சரப்பளி, அரும்புச்சரம், மணிமாலை, கைகளில் கடகவளை போன்ற ஆபரணங்கள் உள்ளன.
வீரன் மற்றும் மனைவியின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையில் குடைபிடித்து, பின்னர் சிவலோகம் அழைத்து செல்லும் அடையாளமாக குடை கட்டப்பட்டிருக்கிறது. சிவலோகம் சென்றடைந்ததை வெளிக்காட்டும் வகையில் சூரியன், சந்திரன், உருவங்கள் கல்லில் மேல்
பகுதியில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளதை வெளிக்காட்டும் வகையில் இச்சதிக்கல்லில் சான்றாக அமைந்துள்ளது. இது 15, 16ம் நூற்றாண்டை சார்ந்ததாக
கருதப்படுகிறது. என்றார்.