ஒரு சிறுமி அழகிய பூனையை வளர்த்தாள். அதன் மீது அவளுக்கு அளவற்ற அன்பு. ஒருநாள் ஒரு நாய், பூனையை விரட்டியது. அது உயிரைக் காக்க ஓடிய வேகத்தில் ஒரு கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. தன் செல்லப் பூனை கிணற்றில் விழுந்ததை அறிந்த சிறுமி கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தாள். பூனை மூழ்குவதும் தத்தளிப்பதுமாக இருந்தது. ஒரு வாளியை கிணற்றில் இறக்கி, “வா! இதைப் பற்றி ஏறிக்கொள், நான் வெளியே தூக்கி விடுகிறேன்,” என கத்தினாள். பயந்து போன பூனையோ, வாளியில் ஏறாமல் தண்ணீரில் முழுமையாக மூழ்கிவிட்டது. மறுநாள் செத்த பூனையாக அதை வெளியில் எடுத்தனர். “என் அழகுப் பூனையே! உன்னைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தேன்.
நீ அதைப் பயன்படுத்தாமல் இறந்து விட்டாயே,” என அழுதாள். இதே போல் தான் ஜெருசலேமைப் பார்த்து இயேசுவும் ஒருநாள் புலம்பினார். “கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக, நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாய் இருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமல் போயிற்று,” என்றார். ஆம்...கடவுள் நம்மை நோக்கி கைகளை நீட்டியிருக்கிறார். அவற்றைப் பற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். கடவுளின் கருணையை உதாசீனப்படுத்தினால், வரப்போகும் சோதனைகளில் இருந்து தப்ப முடியாது.