ஸ்ரீவில்லிபுத்தூர் துளசி வனத்தில் அவதரித்த ஆண்டாளின் காலத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி கிடையாது. அதனால், ஆண்டாள் தனது முக அழகை தினமும் பார்த்துக் கொள்வதற்காக ‘தட்டொளி’ எனப்படும் வெண்கலத்தட்டு மூலமாகவும், அருகிலுள்ள கிணற்று நீரிலும் தனது அழகைக் கண்டு மகிழ்வாளாம். ‘தட்டொளி’ எனப்படும் அந்தத் வெண்கலத் தட்டும், மாலை அணிந்து கொண்டு ஆண்டாள் அழகு பார்த்த கிணறும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இந்தக் கிணற்றில் எட்டிப்பார்த்தால் அந்தக் கன்னியர்களுக்கு தடைகள் அகன்று, விரைவில் நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். மேலும், தினமும் ஆண்டாள் வழிபாட்டின் போது அங்குள்ள தோட்டத்தில் உள்ள மலர்கள், இலை களைக்கொண்டு கிளி ஒன்று தயாரித்து அணிவிப்பார்கள். அதனை, அடுத்த நாள் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அளிப்பது வழக்கம். அந்தக் கிளியினை பெற்று வீட்டில் பூஜை செய்தாலும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஆண்டாள் தனது முக அழகைப் பார்த்துக் கொண்ட அந்த வெண்கலத்தட்டை, கருவறை அடுத்துள்ள அர்த்த மண்டபம் எதிரே, உத்ஸவ மூர்த்திகளுக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் இன்றும் தரிசிக்கலாம். ஆண்டாளுக்கு சாத்திய மாலை தினமும் பெரிய பெருமாளான வடபத்ரசாயிக்கு சாத்தப்படுகிறது. மார்கழி மாதம் எண்ணெய் நீராட்டு உத்ஸவத்தில் ஆண்டாள் தினமும் ஸ்ரீநிவாசர், சுந்தரராஜர், வடபத்ரசாயி போன்ற ஆண் தெய்வ அலங்காரத்தில் எழுந்தருள்வார். இந்த தரிசனத்தைக் காணும் தம்பதியர் இல்லறத்தில் ஒற்றுமையுடனும், சுகமுடனும் வாழ்வர் என்பது ஐதீகம். ஆண்டாள் நாச்சியார் கோயிலில் அமைந்துள்ள ‘திருமுக்குளம்’ பிரமிடை கவிழ்த்து வைக்கப்பட்ட தோற்றத்தில் காட்சி தருகிறது. இந்தத் திருமுக்குளம் ஆண்டாள் நீராடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இக்குளத்து நீரில் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளின் தீர்த்தம் கலந்துள்ளதாக தலபுராணம் கூறுகிறது. குளத்தின் அடிப்பாகத்தில், சுதர்சன ஆழ்வார் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. இக்குளத்தின் நீராடல் ‘மண்டபத்தில் மார்கழி மாதம் ஆண்டாளுக்கு, ‘நீராடல், உத்ஸவம்’ பத்து நாட்கள் நடைபெறும். மேலும், மாசி மாதத்தில் தெப்ப உத்ஸவமும் நடைபெறுகிறது. இக்குளத்து நீரை சிறிதளவு எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டாலே புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.