பதிவு செய்த நாள்
14
ஜன
2019
02:01
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேர்த்திருவிழா, நேற்று (ஜன., 13ல்),சேவற்கொடியேற்றத்துடன் துவங்கியது.
சென்னிமலை சுப்பிரமணியருக்கு, தைப்பூச திருவிழா, வருடந்தோறும், 15 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு விழா, மலைக்கோவிலில் உள்ள, கொடிமரத்தில், நேற்று (ஜன., 13ல்), சேவல் கொடியேற்றி தைப்பூச விழா துவங்கியது. நிகழ்ச்சிக்காக, சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள, கைலாசநாதர் கோவிலிலிருந்து, சுவாமி புறப்பாடு மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம், காலை 7:00 மணிக்கு தொடங்கியது. மலையில், முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவருக்கும், பல்வேறு நெய்வேத்திய பொருட்கள் மற்றும் பவானி கூடுதுறையில் இருந்து கொண்டு வந்த தீர்த்தத்தால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டது.
தலைமை குருக்கள் ராமநாதசிவம், கொடி மரத்துக்கு, சிறப்பு பூஜை செய்து, சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினார்.
மதியம் 1:30 மணிக்கு, சேவல் கொடி, கோவிலை வலம் கொண்டு வரப்பட்டு, முருகன் சன்னதி கொடிமரத்தில், சேவல் கொடியும், சிவன் ஆலயம் முன், நந்தி கொடியும் ஏற்றி, தைப்பூச திருவிழா, முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச தேரோட்டம், 21ம் தேதி, காலை, 6:20 மணிக்கு, நடக்கிறது. தைப்பூச திருவிழாவின் முக்கிய விழாவான, மகா தரிசனம், 25ம் தேதி, இரவு 8:00 மணிக்கு நடக்கிறது.