சிக்கி சீரழியும் குடவரை கோவில் தொல்லியல், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் வருமா?
பதிவு செய்த நாள்
10
ஜன 2026 10:01
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து குடவரை கோவிலான ஆதிவராக பெருமாள் கோவில் பராமிப்பின்றி பாழாகி வருகிறது. தொல்லியல் துறை மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இக்கோவிலை கொண்டு வர, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வைணவ சமய 108 திவ்ய தேசங்களில், 63வது கோவிலாக, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்ட சுவாமியரும் வீற்று அருள்பாலிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, மற்றொரு பிரசித்திபெற்ற, ஆதிவராக பெருமாள் கோவிலும், இவ்வூரில் உண்டு. பொதுப்பணித்துறை சாலை, தொல்லியல் துறை வளாக பாறைக்குன்றில், கோவில் அமைந்துள்ளது. கல்வெட்டு ஆதிவராக பெருமாள், ஒரு வலதுகரத்தில் பூமாதேவி இடையை அணைத்தும், மற்றொரு கரத்தில், அவரது கால்களை உயர்த்தி பிடித்தும், கடலில் இருந்து துாக்கிய நின்ற கோலத்திலும், மற்ற இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் ஆகியவற்றை ஏந்தியும் வீற்றுள்ளார். மகிஷாசுரனின் துண்டிக்கப்பட்ட தலையின் மீது நிற்கும் துர்க்கையம்மன் – மகிஷாசுரமர்த்தினி, யானைகள் அபிஷேகம் செய்யும் கஜலட்சுமி, நின்றவாறு உள்ள மனைவியருடன் சிம்மாசனத்தில் அமர்ந்த சிம்மவிஷ்ணு – நரசிம்மனின் தாத்தா, மனைவியரிடம் துர்க்கையை சுட்டிக்காட்டும் மகேந்திரவர்மன் உள்ளிட்ட சிற்பங்களும் உள்ளன. பாறையின் உட்புறமாக குடைந்து, குடவரை கோவிலாக உருவாக்கப்பட்டு, சிற்பங்கள் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளன. கோவில் வெளிப்புறம், பாறையில் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. பூமாதேவியை வலது கரத்தில் ஏந்தியதால், திருவலவெந்தை என்ற சிறப்பு பெயரும், இப்பகுதிக்கு உண்டு. கோவில் உற்சவர் ஞானபிரான், பழங்காலத்தில், சாலவான்குப்பம் பகுதிக்கு, பார்வேட்டை உலா சென்றதாகவும், திருக்கழுக்குன்றம் அடுத்த, ஈகை பகுதி சென்று, திருமஞ்சனம் கண்டதாகவும், பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் தொல்லியல் துறை வளாகத்தில் உள்ள, இத்தகைய கோவிலை, நீண்டகாலமாக தனியார் தரப்பே நிர்வகித்து வருகின்றனர்.தொல்லியல் துறை உருவாகும் முன் அடுத்தடுத்த தரப்பினர் என, நிர்வகித்து வந்துள்ளனர். இத்துறை உருவான பின் பாரம்பரிய சின்னம் அடிப்படையில், தொல்லியல் துறை; வழிபாடு அடிப்படையில், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டிற்கு, கோவிலை கொண்டு வந்திருக்க வேண்டும். அதன் சொந்தமான சொத்துக்கள் காரணமாக, அதற்கான முயற்சியை, மூதாதையர் தடுத்து, தனியார் வசமே தற்போதும் நீடிக்கிறது. வழிபாடு இல்லை கோவிலுக்கு சொந்தமாக, ஞானபிரான் சொத்து என்ற பெயரில், மாமல்லபுரம், பெருமாளேரி, சாலவான்குப்பம், பையனுார் ஆகிய பகுதிகளில், பல ஏக்கர் நிலம் இருந்து, நாளடைவில், பிறரிடம் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோவில் அருகில் உள்ள நிலத்தை, 25 ஆண்டுகளுக்கு முன் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில், முறையான வழிபாடு இல்லை. பெயரளவில் நைவேத்யம் படைப்பதாக, பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அதற்காக, பூசாரி எப்போது வந்து செல்கிறார் என்பதை அறிய முடியாமல், கோவில் பூட்டியே உள்ளது. கோவில் பற்றி அறிந்து, வழிபட வருவோர், இக்கோவிலில் மட்டுமே உள்ள, பல்லவ மன்னர்களின் சிற்பங்களை காண்பதற்கு கல்வெட்டு ஆர்வலர்கள், கோவில் திறக்கப் படாமல் ஏமாற்றம் அடை கின்றனர். கோவில் வளாகமும் சீரழிந்து உள்ளது. நிர்வாக தரப்பினர் பராமரிப்பதும் இல்லை. தொல்லியல் துறை, பாரம்பரிய நினைவுச்சின்னம் என்றும், அதை சேதப்படுத்த கூடாது என்றும் குறிப்பிட்டு, பல ஆண்டுகளுக்கு முன் அமைத்த அறிவிப்பு பலகையும் அகற்றப்பட்டுள்ளது. பழமை தன்மைக்கு மாறாக, கான்கிரீட் கட்டடம், பிளாஸ்டிக் கூரை அமைக்கப் பட்டுள்ளது. அப்பகுதியினர், வாகனங்களை, சன்னிதி முகப்பு மண்டபம் வரை நிறுத்துகின்றனர். குடிமகன்கள் மது அருந்துகின்றனர். விளையாட்டு திடலாகவும் பயன்படுத்துகின்றனர். கோவில் வழிபாடு, பராமரிப்பு, நிர்வாகம் ஆகியவை கருதி, தொல்லியல் துறை, ஹிந்து சமய அறநிலைய ஆகிய துறைகளிடம் ஒப்படைக்க தனியார் நிர்வாகத்தினர் மறுக்கின்றனர். இது குறித்து சரித்திர ஆர்வலர்கள் கூறியதாவது: இக்கோவில், ஆன்மிக வழிபாடு, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், தனியாரிடம் சிக்கி சீரழிக்கப்படுகிறது. அரசு நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துகின்றன. நடவடிக்கை தொல்லியல் துறை கோவிலை கையகப் படுத்தி பராமரிக்க வேண்டும். அறநிலையத்துறை முறையான வழிபாட்டிற்காக, கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். கோவில் நிலம் குறித்து ஆய்வு செய்து, மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘ கோவிலை நிர்வகித்து பராமரிக்க, தக்காரை நியமித்து, கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
|