மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் காவலர் சுந்தரராஜன் 57, பணியின்போது மாரடைப்பால் இறந்தார். இதனால் பரிகார பூஜைக்கு பின் கோயில் நடை காலை 9:00 மணிக்கு திறக்கப்பட்டது. மதுரை அருகே மணலுாரை சேர்ந்த இவர், நீண்டகாலமாக மீனாட்சி அம்மன் கோயிலில் காவலராக பணியாற்றி வந்தார். நேற்றுமுன்தினம் இரவு கோயிலில் முக்குறுணி விநாயகர் சன்னதி முன்புள்ள கோபுர மாடத்தின் அறையில் இவரும், மற்றொரு காவலர் கேசவனும் காவல் பணியில் இருந்தனர். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சுந்தரராஜன் மாரடைப்பால் இறந்தார். இதுகுறித்து கோயில் நிர்வாகத்திற்கு கேசவன் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, வழக்கமாக அதிகாலை 5:30 மணிக்கு திறக்கப்பட வேண்டிய கோயில் நடை திறக்கப்படவில்லை. தைப்பொங்கலையொட்டி சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் நீண்டநேரம் சித்திரை வீதியில் காத்திருந்தனர். பரிகார பூஜைக்கு பிறகு காலை 9:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது.