பதிவு செய்த நாள்
16
ஜன
2019
01:01
புதுடில்லி: சபரிமலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்களை விசாரிக்கும் அமர்வில் உள்ள, நீதிபதி, இந்து மல்ஹோத்ரா,மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அதனால், திட்டமிட்டபடி, வரும், 22ம் தேதி விசாரணை துவங்காது என, கூறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கு 10 - 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, உச்ச நீதிமன்ற, அரசியல் சாசன அமர்வு, கடந்தாண்டு, செப்., 28ல் அளித்த தீர்ப்பில், அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என, கூறியது.
இந்த தீர்ப்புக்கு பல்வேறுதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என, பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணை, வரும், 22ல் துவங்கும் என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் அமர்வு முன், தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், மேத்யூஸ் நெடும்பரா, நேற்று, புதிய கோரிக்கையை வைத்தார். அவர் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணையை, நேரடியாக ஒளிபரப்பும் வசதி செய்ய வேண்டும். விசாரணை முழுவதையும், வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் நடக்கும் வாதங்கள் மற்றும் தீர்ப்புக்காக, கேரளா மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் இருந்து பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியதாவது: சபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்களை விசாரிக்க உள்ள, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள, ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா தவிர்க்க முடியாத சூழ்நிலையில், திடீரென மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். அதனால், ஏற்கனவே, திட்டமிட்டபடி, வரும், 22ல், இந்த வழக்கு விசாரிக்கப்படுவது சந்தேகமே. இவ்வாறு அவர் கூறினார்.
கனகதுர்கா மீது தாக்குதல்: அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதை நிறைவேற்ற, மார்க்சிஸ்ட் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு பல முயற்சிகளை எடுத்தது. பல்வேறு ஹிந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. கேரளாவைச் சேர்ந்த, கனகதுர்கா, 44, பேராசிரியை, பிந்து, 42, ஆகியோரை, சபரிமலைக்கு அழைத்துச் சென்று, மாநில அரசு, சாமி தரிசனம் செய்ய வைத்தது. இதையடுத்து, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள தன் வீட்டுக்கு திரும்ப முடியாமல், கனகதுர்கா, தவித்து வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அவர் தன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். சபரிமலை கோவிலுக்கு சென்றதைக் கண்டித்து, கனகதுர்காவை, அவரது மாமியார் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கனகதுர்கா தன்னை தாக்கியதாக போலீசில் புகார் செய்த அவரது மாமியார் பெருந்தல்மண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.