பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
திருவொற்றியூர்: திருவொற்றியூர் ஆஞ்சநேயர் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திருவொற்றியூர், மஸ்தான் கோவில் தெரு, கடற்கரை சாலையில், அருள் கொடுக்கும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இந்த கோவில் வளாகத்தில், ஸ்ரீ ராமர், நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமிகளுக்கான கோவில்கள் கட்டுமான பணி, சமீபத்தில் முடிந்தது.இதையடுத்து, புதிதாககட்டப்பட்ட கோவில்களுக்கான, மஹா கும்பாபிஷேகம் நேற்று (ஜன.,20) நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜன.,19) காலை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், முதல் கால பூஜை, யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாரதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
நேற்று (ஜன.,20) காலை, 2ம் கால பூஜை, நாடி சந்தனம், பூர்ணாஹூதி, யாத்ராதானம் ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, காலை, 8:30 மணிக்கு, ஆஞ்சநேயர், ராமர், நவநீத கிருஷ்ணன், ராகவேந்திர சுவாமி, விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின், பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்தின் போது, சுற்றுவட்டார த்தைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான பக்தர்கள், ஆஞ்சநேயருக்கு ஜெய், ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெய் என, விண்ணதிர முழங்கினர். இதையடுத்து, கலசங்களுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.