பதிவு செய்த நாள்
06
பிப்
2019
02:02
தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில் வரும் பிப். 19-ம் தேதி மாசிமக தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இதற்காக சிவாலயங்களில் வரும் 10-ம் தேதியும், வைணத் தலங்களில் 11-ம் தேதியும் பத்து நாள் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் மாசிமக விழாவில் சிவாலயங்கள் மற்றும் வைணவத் தலங்களில் கொடியேற்றி பத்துநாள் உற்சவம் நடைபெறும். இதையடுத்து மகாமகம் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர்கோவில், காளகஸ்தீஸ்வரர் கோவில், சோமேஸ்வரர்கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலங்களில் வரும் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. இதில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 13-ம் தேதி அறுபத்து மூவர் வீதிவுலாவும், 14-ம் தேதி ஓலைச்சப்பரமும், 18-ம் தேதி இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி ரத புறப்பாடும், 19-ம் தேதி மகாமக குளத்தில் காலை 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.
அதே போல் அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர் கோவில் சார்பில் பிப். 18-ம் தேதி மாலை மகாமக குளக்கரையில் தேரோட்டம் நடைபெறவுள்ளது.
வைணவத் தலங்கள்: மாசி மகத்தை முன்னிட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி கோவில், ராஜகோபாலசுவாமிகோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில் 11-ம் தேதி பத்து நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 19 ம் தேதி காலை 7 மணிக்கு சக்கரபாணி கோவிலில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. பின்னர் 12 மணியளவில் காவிரி ஆற்றில் சக்கரப் படித்துறையில் வைணவக் கோயில்கள் சார்பில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. மாசிமக விழாவுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்களுடன் இணைந்து செய்து வருகின்றனர். இந்தாண்டு மகாமக குளத்திலும், பொற்றாமரைக்குளத்திலும் பக்தர்கள் நீராடுவதற்கு போதியளவு தண்ணீ்ர் தேங்கியுள்ளது. ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை. கடந்த ஆண்டை போல் காவிரியில் மின்மோட்டார் மூலம் நீராட வசதி செய்து தர வேண்டும் அல்லது காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.