பதிவு செய்த நாள்
19
பிப்
2019
04:02
நீண்ட நாளாக விடை தேடிய கேள்வி இது. அனுபவம் என்னுள் பேசத் தொடங்கியது. அழகானவர்களை ரசிக்கிறோம். நாமும் அழகாக இருக்க ஆசைப்படுகிறோம். அழகாக இல்லை என்பதற்காக பலரை ஒதுக்குகிறோம். நம்மை பிறர் ஏற்காத போது மனம் வாடுகிறோம். உண்மையில் எது அழகு? சிவந்த நிறமா? கூரிய மூக்கா? வேல் போன்ற விழியா? வனப்பான உடலா? வண்ண வண்ண ஆடையா? விதவிதமான சிகை அலங்காரமா? விலை உயர்ந்த நகை அலங்காரமா? இவை எல்லாம் அழகு தான். ஆனாலும் அன்புடன் அரவணைக்கும் பெற்றோர், பெற்றோரை பேணிக் காக்கும் பிள்ளைகள், மனைவியை மட்டம் தட்டாத கணவர், கணவரை விட்டுக் கொடுக்காத மனைவி, பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள், நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வையுள்ள பெண்கள், திறமையுடன் தொழிலில் ஈடுபடுபவர்கள், பணியில் நேர்மை மிக்கவர்கள், விபத்து ஏற்படுத்தாத ஓட்டுநர்கள், சமுதாயம் மேம்பட உழைப்பவர்கள், பணிவுடன் இருக்கும் பண்பாளர்கள், மலர்ந்த முகத்துடன் இனிமையாக பேசுபவர்கள், பிறர் துன்பம் கண்டு கலங்கும் கண்கள், அத்துன்பம் போக்க விரையும் கைகள், பிறர் மனம் கோணாமல் பேசும் வாய், பிறரை ஊக்கப்படுத்தும் சொல். இதை எல்லாம் வாழ்வில் பின்பற்றுகிறீரா? உண்மையில் நீங்கள் தான் அழகானவர்.