திட்டக்குடி: திட்டக்குடி முக்களத்தியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.திட்டக்குடி மேலவீதியில் உள்ள முக்களத்தியம்மன் கோவில் திருவிழா கடந்த பிப்ரவரி 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.எட்டாம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் (மார்ச்., 5ல்) பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். நேற்று (மார்ச்., 6ல்) மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் முக்களத்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.