வீரசின்னம்மாள் கோயிலில் வரும் 5ம் தேதி மாசித் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2012 11:03
எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி கிராமத்தில் இலந்தைமுள் கோட்டை வீரசின்னம்மாள் கோயில் மாசித்திருவிழா வரும் 5ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு இலந்தை முள்ளால் ஆன கோட்டை கட்டும் பணி துவங்கியது. சுரைக்காய்பட்டி சில்லவார் குலராஜகம்பளத்தார் சமுதாயத்தினர் கடந்த மாதம் 15ல் ஊர் கூட்டம் போட்டு இலந்தை முள் கோட்டை வீரசின்னம்மாள் கோயில் மாசித்திருவிழா இந்தாண்டு நடத்துவது சம்பந்தமாக ஊர் கூடி முடிவு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு சுரைக்காய்பட்டி முன்னாள் பஞ்., தலைவர் நாகரத்தினம் தலைமையில் 108 பக்தர்கள் கடந்த 26ம் தேதி குருமலை, முடுக்கலாங்குளம் மலை, கண்மாய், காட்டுப்பகுதிகளில் ஐந்து டிராக்டர்களில் இலந்தை முள் லோடு ஏற்றி சுரைக்காய்பட்டி வந்தனர். கடந்த 27ம் தேதி சுமார் 100 அடி சுற்றளவு 25 அடி உயரம், 10 அடி அகலம் வட்ட வடிவமான கோயிலில் இலந்தை முள் கொண்டு கோட்டை கட்டும் பணி துவங்கி புதுப்பித்தனர். அன்று இரவு கோயிலின் முன்பு ஊர் கூடி அம்மனுக்கு பூஜைகள் நடத்தி அம்மன் அருள்வாக்கு உத்தரவு கேட்கப்பட்டது. இதன் பேரில் வரும் 5ம் தேதி இரவு மாசி பொங்கல் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் 5ம் தேதி இரவு 9 மணியளவில் தேவதந்துமி ஆகிய மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தெய்வீக கலையான தேவராட்டம் ஆடிக்கொண்டே ஊர் மந்தையிலிருந்து புறப்பட்டு திருவீதி உலா வந்து கோயிலை வந்தடைவர். இரவு 11 மணிக்கு மேல் பூஜை துவங்கும். ஜக்கதேவியின் அவதாரமான வீரசின்னம்மாள் அம்மனுக்கு உருவ வழிபாடு கிடையாது. கோயிலின் மத்தியில் மண்பானையில் நிறைகுடம் தண்ணீர் வைத்து சித்தாடை கட்டி, காதோலை கறுகுமணி பாசி அணிவித்து அம்மனாக அலங்கரித்து தீபம் ஏற்றி பூஜைகள் நடக்கும். பூசாரி பிச்சைவேல் பூஜைகளை நடத்துவார். முதலில் ஊர் பொதுப்பொங்கல் வைக்கப்படும். அதையடுத்து வீடுதோறும் ஒரு பொங்கல் வீதம் வைத்து வழிபடுவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் குழந்தை வரம் நேர்த்திகை கடனாக கரும்பு தொட்டில் கட்டி அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தி வழிபடுவார்கள். ஏற்பாடுகளை சுரைக்காய்பட்டி சில்லவார் குலராஜகம்பளத்தார் சமுதாய விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.