பதிவு செய்த நாள்
02
மார்
2012
11:03
திருச்செங்கோடு: சின்ன ஓம்காளியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு நடந்த தீர்த்த ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருச்செங்கோடு சின்ன ஓம்காளியம்மன் கோவில் குண்டம் விழா, கடந்த ஃபிப்ரவரி மாதம் 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் ஸ்வாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. வரும் 6ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, குண்டம் இறங்க காப்புக்கட்டிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலையடிவாரக் குட்டையிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொ டர்ந்து, அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, இன்று, 108 அக்னி கரகம், அலகு குத்திய பக்தர்கள் ஊர்வலம், விளக்கு பூஜை நடக்கிறது. வரும் 4ம் தேதி, 108 சங்காபிஷேகமும், 5ம் தேதி இரவு பூச்சொறிதல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. பின், 6ம் தேதி அதிகாலை கோவில் பூசாரி கம்பத்துடன் முதலில் குண்டம் இறங்க, அவரைத் தொடர் ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் குண்டம் இறங்குவர். தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும். வாண வேடிக்கை மற்றும் புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவுடன் விழா நிறைவுபெறும்.