திருப்பூந்துருத்தி நாராயண தீர்த்தர் ஸ்வாமி ஆராதனை விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2012 11:03
தஞ்சாவூர்: திருப்பூந்துருத்தி நாராயண தீர்த்தர் ஸ்வாமிகளில் 266வது ஆண்டு ஆராதனை விழா மூன்று நாட்கள் கோலாகலமாக நடந்தது. தஞ்சை மாவட்டம் வரகூர் வெங்கடேஷ பெருமாள் கோவிலில் கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் இசைக்கருவூலத்தை உருவாக்கியவர் நாராயண தீர்த்தர் ஸ்வாமி. இவர் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவருடைய சமாதி திருவையாறு அருகே உள்ள திருப்பூந்துருத்தியில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நாராயண தீர்த்தர் ஸ்வாமிகளின் ஆராதனை விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டும் 266வது ஆண்டு ஆராதனை விழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துவங்கியது. விழாவில், மெகபூப் சுபானி குழுவினர் நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடத்தினர். தஞ்சாவூர் இந்தியன் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் ரகுவத்ஸாசாரி, எம்.எல்.ஏ., ரத்தினசாமி ஆகியோர் பங்கேற்றனர். முதல்நாள் டி.என்.சேஷகோபாலன் குழுவினரின் பாட்டு, இன்னிசை கச்சேரி, சொற்பொழிவுகள் நடந்தது. இரண்டாம் நாள் திருக்காட்டுப்பள்ளி சர்.சிவசாமி அய்யர் நூற்றாண்டு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளில் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முடிவில், மூன்றாம் நாளான நேற்று சென்னை குழுவினரின் குச்சுப்புடி நடனம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவற்றுடன் ஆராதனை விழா நிறைவடைந்தது.