பதிவு செய்த நாள்
28
மார்
2019
01:03
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் ஆபரணங்களை, கோவில் பணியாளர்கள் பாதுகாக்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில், ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள பழைய உற்சவர் சிலை சிதிலம் அடைந்ததாக கூறி, 2016ல், புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது. புதிய சிலையில், சுவாமி வீதியுலா நடத்த,பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், இக்கோவில் பங்குனி உத்திர திருவிழாவிற்கு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பழைய உற்சவர் சிலை பயன்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகம், கோவிலின் அனைத்து பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு, உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:பூஜையில் உள்ள உற்சவர் சிலை, கல் சிலைகளை நல்ல முறை யில் பாதுகாக்க வேண்டும். அனுமதியில்லாத சிலைகள் மற்றும் பொருட்களை, கோவிலில் வைக்கக் கூடாது. மீறி வைத்திருந்தால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவி கேமரா, அவசர ஒலிப்பான் நல்ல முறையில் இயங்குகிறதா என, அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அவற்றை, உரியபடி பராமரிக்க வேண்டும்.கோவில் உற்சவர் சிலைகள், நகைகள் மற்றும் முக்கிய வாகனங்களை பாதுகாக்க, முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை, செயல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.