சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் அவதி: கோயில் நிர்வாகம் அலட்சியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2019 11:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் ரதவீதியில் பந்தல் அமைத்து பக்தர்களை பாதுகாக்க, கோயில் நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. ராமேஸ்வரம் தீவு பகுதியில் கோடை வெப்பம் 30 முதல் 35 டிகிரி செல்சியஸ் பதிவாகி, வெயில் சுட்டெரிக்கிறது. ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வெப்பத்தால் நடமாட முடியாமலும் பாதிக்கின்றனர். ராமேஸ் வரம் திருக்கோயிலுக்கு ரதவீதியில் நடந்து வரும் முதியோர், பெண்கள், குழந்தை பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் ஒதுங்கி நிற்க இடம் கூட இன்றி ஓடோடி சென்று அவதிப்படுகின்றனர். பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பகலில் லாட்ஜ்களில் முடங்குகின்றனர்.
சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்களை பாதுகாக்க 2017 ல் கோயில் நிர்வாகம் ரதவீதியில் பிரமாண்ட பந்தல் அமைத்து, நீர் மோர் வழங்கினர். நகராட்சி நிர்வாகம் ரதவீதியில் தற்காலிக தொட்டி வைத்து குடிநீர் வழங்கினர். இந்தாண்டு பந்தல், குடிநீர் வசதி ஏற்படுத்திட கோயில் நிர்வாகம், நகராட்சிக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் சரவணன் கூறியதாவது: கோடை வெயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரதவீதியில் பந்தல், குடிநீர் அமைத்தனர். இந்தாண்டில் இதுநாள் வரை எவ்வித வசதி இன்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர். குடிநீருக்கு ஓட்டல்களை பக்தர்கள் தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ரதவீதியில் பந்தல் அமைக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.