பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
02:04
உடுமலை:உடுமலை பகுதியிலுள்ள பழங்கால கோவில்களை புனரமைத்து பாதுகாக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை பகுதியில், அமராவதி மற்றும் உப்பாற்றங்கரையில் பழங்கால கோவில்கள் அதிகளவு உள்ளன.கற்றளிகள் மற்றும் அதற்கு பிந்தைய கட்டுமான தொழில் நுட்பங்களை கொண்ட கோவில்கள் இப்பகுதியில், ஏராளம் உள்ளன.இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவில்கள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல்
உள்ளன. முறையான பராமரிப்பு இருந்தாலும், நூற்றாண்டு களை கடந்த கட்டுமானங்கள், சிதிலங்கள் தவிர்க்க முடியாததாக உள்ளது.
எனவே, தொல்லியல்துறை வழிகாட்டுதல் பெற்று, இந்து அறநிலையத்துறை நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, சோமவாரப்பட்டி கண்டியம்மன், கோட்டமங்கலம் வல்லக் கொண்டம்மன் ஆகிய கோவில்களை புனரமைக்க, தொல்லியல்துறையினர் ஆய்வு
நடத்தினர். அதன்பின்னர், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய, இக்கோவில்கள் தற்போது பொலிவிழந்து வருகின்றன. முன்மண்டப சுவர்கள், மேற்கூரை ஆகியவை சிதிலமடைந்து, செடிகள்
முளைத்துள்ளன.அப்பகுதி மக்கள் கூறியதாவது: பழங்கால கோவில்கள் வரலாற்றையும், அப்போதைய வாழ்வியலை தற்போதும் தெரிந்து கொள்ளும் வரலாற்று ஆவணங்களாக
உள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால், கோவிலில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்கள் சிதிலமடைவது வேதனையளிக்கிறது.
மானிய நிலங்கள் மூலம், இந்து அறநிலையத்துறைக்கு நிரந்தர வருவாய் கிடைத்தாலும், அடிப்படை பராமரிப்பு பணிகள் கூட மேற்கொள்ளப்படுவதில்லை. கோவில்கள் முற்றிலுமாக
சிதிலமடையும் முன், இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுப்பது அவசியாகும். இவ்வாறு, தெரிவித்தனர்.