பதிவு செய்த நாள்
13
ஏப்
2019
02:04
திருப்பத்தூர்: சோழர் காலத்திய இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இது குறித்து, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் அருகே உள்ள உடையாமுத்தூரில் ஏரிக்கரை யோரம் வேடியப்பன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள வேப்ப மரத்தின் அடியில் உள்ள கற்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், கி.பி.,11ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர் காலத்தை சேர்ந்த இரண்டு நடுகற்கள் இருந்தன.
இரண்டு கற்களும் நான்கு அடி உயரமும், இரண்டு அடி அகலமும் உள்ளன. நடுகல்லில் நீண்ட கத்தியும், வில்லும் உள்ளது. போரில் இறந்த வீரர்களின் நினைவாக அப்போதைய மக்கள் அவர்களின் உருவத்தை கல்லில் செதுக்கி வழிபட்டு வந்துள்ளனர். இந்த கல்லின் எதிரில் இரண்டு மண் குதிரைகள் உள்ளன. அதன் அருகில் உள்ள நிலத்தை தோண்டி பார்த்ததில்,
ஏராளமான மண் பொம்மைகள் கிடைத்தன. அந்த மண் பொம்மைகளை ஆய்வு செய்ததில், கெட்டியான மண்ணை கொண்டு ஆண், பெண், குதிரை, காளை என ஏராளமான உருவங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த கோவிலுக்கு எதிரே உள்ள. காட்டுப்பகுதியில் முந்தைய கால மனிதர்கள் பயன்படுத்திய, கற்கோடாரிகள் காணப்படுகின்றன.
இப்பகுதியில் தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்தால், பழங்கால வரலாற்று தடயங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது காணிநிலம் முனிசாமி, வரலாற்று
ஆய்வாளர்கள் திலீப், ரஜினி உடனிருந்தனர்.