பதிவு செய்த நாள்
23
ஏப்
2019
02:04
மோகனூர்: மோகனூர், ஆரியூர் மாரியம்மன் கோவில் திரு விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி, அம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
மோகனூர் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 8ல் கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதையடுத்து, பல்வேறு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, தினமும், காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு சென்றனர். நேற்று முன்தினம் (ஏப்., 21ல்) இரவு, வடிசோறு வைத்து, அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று (ஏப்., 22ல்) காலை, பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை, காவிரி ஆற்றுக்கு சென்று, கரகம் பாலித்து, 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து, கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, சுவாமிக்கு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (ஏப்., 23ல்) காலை, 6:00 மணிக்கு, பொங்கல், கிடாவெட்டு பூஜை, நாளை (ஏப்., 24ல்) காலை, 10:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
* ஆரியூர் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 8ல், காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (ஏப்., 21ல்) இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று (ஏப்., 22ல்) காலை, பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை, மோகனூர் காவிரி ஆற்றில், புனித நீராடிய, 500க்கும் அதிகமான பக்தர்கள், ஊர்வலமாக சென்று, கோவில் முன் ஏற்படுத்தப் பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு மாவிளக்கு பூஜை நடந்தது.