பதிவு செய்த நாள்
25
ஏப்
2019
02:04
கிருஷ்ணகிரி: மஹாபாரத நிகழ்ச்சியில், நேற்று (ஏப்., 24ல்) அர்ச்சுனன் தபசுமரம் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, தர்மராஜா கோவிலில், திரவுபதாம்பிகை அக்னி வசந்த மகோத்சவ மஹாபாரத விழா கடந்த, 10ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், வரும், 28 வரை மதியம், 2:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, கோவில் வளாகத்தில் மஹாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. தொடர்ந்து இரவில், பூந்தோட்டம் செல்வ விநாயகர் நாடக சபா குழுவினரின் பாரத தெருக்கூத்து நாடகங்கள் நடந்து வருகின்றன.
விழாவின், 13வது நாளான நேற்று (ஏப்., 24ல்) காலை, 11:00 மணிக்கு, அர்ச்சுனன், தபசுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அர்ச்சுனன் தனது எதிரிகளை கொல்ல, பகலி என்று சொல்லக்கூடிய, வில் வற்றாக அம்பை, சிவனிடத்தில் பெறுவதற்காக, 90 அடி தபசு மரத்தில், இடது காலால் ஊன்றி வலது காலை தூக்கி, கண்களை மூடி, கைகளை கூப்பி வேண்டிக் கொண்டு, மேலே ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.