பதிவு செய்த நாள்
29
ஏப்
2019
03:04
வடவள்ளி:இலங்கையில், கடந்த வாரம் நடந்த குண்டு வெடிப்பின் எதிரொலியாக, மருதமலை கோவிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கையில், கடந்த 21ம் தேதி, தொடர்ச்சி யாக எட்டு இடங்களில், குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இதில், 360க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, தமிழகம் முழுவதும், பாதுகாப்பை பலப்படுத்த, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், பாதுகாப்பை பலப்படுத்த, இந்து அறநிலையத்துறையும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவையின் முக்கிய கோவில்களில் ஒன்றாக விளங்கும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனை வரையும், மடப்பள்ளி அருகே பொருத்தப்பட்டுள்ள, மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலம் பரிசோதனை செய்த பிறகே, சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவில்களில் போலீசாரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.