திருப்பதி: திருமலையில் அன்றாடம் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான செலவு 27 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது அன்னதான பிரசாதத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை உயர்வு காரணமாக திருத்தியமைக்கப்பட்டு உள்ளது. காலை உணவுக்காக 7 லட்சம் செலவையும், மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு 11.5 லட்சம் ரூபாயும் செலவாகிறது. பக்தர்களுக்கு இலவச உணவு திட்டம் 1985 இல் தொடங்கப்பட்டது, ஆனால் பின்னர் அது 1994 ல் எஸ்.வி. நித்திய அன்னதான அறக்கட்டளையாக மாறியது. ஜூலை 2011 ல் மாத்ரி தரிகோண்டா வெங்கமம்பாவின் பெயரில் அன்ன பிரசாத வளாகம் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டது. இன்று அன்ன பிரசாதம் வைகுண்டம் வரிசை வளாகத்தின் அனைத்து பிரிவுகளிலும் விநியோகிக்கப்படுகிறது. திருமலையில் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் உணவு சாப்பிடுகின்றனர். விழா நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தையும் தொடும்.
திருமலையில் மட்டுமின்றி திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாஸம், அரசு மருத்துவமனை, ஆயுர்வேத மருத்துவமனை, திருச்சானுார் கோவில், அரசு பள்ளிகளில் உள்ளவர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. மேலும் கோசாலை மூலம் கிடைக்கும் 12,500 லிட்டர் பாலும் பக்தர்களுக்கு தினமும் இலவசமாக வழங்கப்படுகிறது. தரிகோண்டா வெங்கமம்பா அன்ன பிரசாத பவனில் தினமும் 16.5 டன் அரிசி மற்றும் 6.5-7.5 டன் காய்கறிகள் பக்தர்களுக்காக செலவழிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் 11 மணி வரை செயல்படுகிறது. அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது. அன்ன பிரசாதம் வழங்குவதற்காக பாங்கில் போடப்பட்டுள்ள தொகை 1067 கோடி ரூபாயாகும், முழுக்க முழுக்க பக்தர்களால் வழங்கப்பட்ட இந்த நன்கொடையின் மூலம் வரும் வட்டியில் இருந்துதான் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.