பதிவு செய்த நாள்
07
மே
2019
04:05
ஏகாம்பர நாதரை மணக்க விரும்பிய ஏலவார்க்குழலி அம்மையால் உருவாக்கப்பட்ட காவல் தெய்வமே சம்ஸ்கிருதத்தில் பிரளய பத்தினி என அழைக்கப்படும் பிரளய கால அம்மன். கடந்த 55 வருடங்களாக, ஏகாம்பர நாதர் கோயிலில் குருக்களாக உள்ள உஞ. ஏகாம்பர குருக்களிடம் பேசினோம். திருக்கயிலாயத்தில், விளையாட்டாக சிவனாரின் கண்களை மூடினார் பார்வதிதேவி, சிவனாரின் இரண்டு கண்களாகத் திகழும் சூரிய சந்திரர்கள் இல்லாமல், பூமியே இருண்டு, ஸ்தம்பித்தது. சிவனார் கோபம் கொண்டு, உமையம்மையை ஏகாம்பரத்துக்கு அனுப்பினார் சிவன். காஞ்சி வந்த பார்வதிதேவி, 32 அறங்களையும் செய்து அறம்வளர்செல்வியாகத் திகழும் தலம் இது. சுமார் 3,500 வருடப் பழைமையாவ காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் இன்றைக்கும் அந்த மரத்தைக் காணலாம். இதன் நான்கு கிளைகளிலும் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு என நான்கு சுவை கொண்ட மாம்பழங்கள் காய்க்கின்றன. மணல் லிங்கத்தை வைத்து வழிபட்ட ஏலவார்குழலி அம்மை, தன் தவத்துக்கு இடையூறு வராமல் இருக்க, காவலுக்குப் பிரளய கால அம்மனைத் தோற்றுவித்தார். இந்தத் தகவல் தெய்வம், ஈஸ்வர அம்சம்.
சவுமிய சொரூபமாகக் காட்சி அளிக்கும் இந்தப் பிரளய கால அம்மன், காஞ்சி பெரிய கோயிலின் (ஏகாம்பரேஸ்வரர் கோயில்) வெளிப்பிராகாரத்தில் காட்சி அளிக்கிறார். மாமரத்தடியில் தபஸ் செய்த அம்மையைச் சோதிக்க விரும்பிய இறைவன், கங்கையை அனுப்பினார். காவல் தெய்வம் பிரளயகால அம்மனின் தலைக்கு மேல் கங்கை வெள்ளம் சீறிப் பாய்ந்தது. இதனால் பிரளய கால அம்மன் சிரசில் கங்கை உள்ளது. சிவனாருடன் சக்தி இணைந்து இடபாகம் பெற்ற தலம் இது. இங்குள்ள மூலவர்க்கு அபிஷேகம் இல்லை. பூஜைகள் மட்டும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இன்றும் காஞ்சிக்கு கீழே கங்கா நதி ஓடுவதாக ஐதீகம். பலருக்குக் குலதெய்வமாகத் திகழும் பிரளயகால அம்மனை வழிபட, மனச்சங்கடங்கள் தீரும் என்பது உறுதி என்கிறார்.